ஓர் அரசு பிரச்னையின்றி இருக்கவேண்டுமென்றால் என்ன செய்யவேண்டும்?
மக்களுக்கு மூன்று வேளை சாப்பாடு, தங்க இடம், குடிக்க நீர், செய்ய வேலை, பார்க்க தொலைக்காட்சி எல்லாம் அளிக்க வேண்டும் என்கிறார் திருவள்ளுவர்.
ஆமாம். வள்ளுவனார் பெயரில் நானே எழுதியதுதான் இது. இதை நம் மத்திய, மாநில அரசுகள் மிகவும் தெளிவாகச் செய்கின்றன. எப்படி என்று பின்னர் பார்ப்போம். இது காங்கிரஸ் டெல்லியில் தொடர்ந்து ஒன்பது ஆண்டுகள் முழுமை செய்திருக்கிற நேரம். இங்கே அதிமுக இரண்டாவது ஆண்டை முழுமை செய்திருக்கிற நேரம்.
காங்கிரஸ் கடந்த ஒன்பது ஆண்டுகளில் செய்திருக்கும் மிக முக்கியமான சாதனைகளாக இவற்றைச் சொல்லலாம். தகவல் அறியும் உரிமைச் சட்டம், கிராமப்புற வேலைவாய்ப்பு உறுதித் திட்டம், கல்வி உறுதித் திட்டம், உணவு உரிமைத் திட்டம் (தயார் நிலையில் உள்ளது).
ஆனால் ஊழல், அதிகார துஷ்பிரயோகம் ஆகியவற்றில் படு பாதாளத்துக்குப் போயிருக்கிறது என்பதற்கு ஏராளமான எடுத்துக்காட்டுகளை அன்றாடம் பார்க்க முடிகிறது. காமன்வெல்த் விளையாட்டு ஊழல், 2ஜி ஊழல், ராணுவ ஹெலிகாப்டர் வாங்க லஞ்சம், இப்போது நிலக்கரி ஊழல்.. ஏறக்குறைய எல்லா மாதங்களும் உச்சநீதிமன்றத்திடம் ஏதாவது ஒரு விஷயத்தில் குட்டுவாங்கிக் கொண்டே இருக்கிறது.
அத்துடன் எந்த போராட்டமாக இருந்தாலும் அதன் குரல்வளையை சப்தம் போடாமல் நெரித்துவிடும் பழக்கமும் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. கூடங்குளம் போராட்டம், அந்நிய சக்திகளால் தூண்டிவிடப்படுகிறது என்று பிரதமரே சொன்னார். ஆனாலும் அதற்கு ஓர் ஆதாரத்தைக்கூட காட்ட அவரால் முடியவில்லை. அகிம்சை வழியில் நடக்கும் மக்கள் போராட்டத்துக்கே இப்படிக் கரியைப் பூசுவதில் பிரதமரே முன்னிலை வகிக்கிறார் என்றால், காடுகளிலும் மலைகளிலும் நடக்கும் ஆதிவாசிகளின் ஆயுதப் போராட்டங்களுக்கு என்ன பதிலடியை இந்த அரசு கொடுக்கிறது என்பதைப் புரிந்துகொள்ள முடியும்.
எல்லாவற்றிலும் அந்நிய முதலீட்டைக் கொண்டுவருவதில் மன்மோகன் சிங் அரசு மிகப் பிடிவாதமாக இருக்கிறது. காப்பீடு, விமானப்போக்குவரத்து, சில்லறைவர்த்தகம்- என எல்லாவற்றையும் எதிர்ப்புகளை மீறி தயங்காமல் காங்கிரஸ் அரசு வாசல்களைத் திறந்துவிட்டுக் கொண்டே இருக்கிறது.
கடந்த சில ஆண்டுகளாக உத்தரப்பிரதேசம், பீகார், குஜராத், திரிபுரா என பெரும்பாலான மாநிலத் தேர்தல்களிலும் அடிவாங்கிய காங்கிரஸ், சமீபத்தில் கர்நாடகாவில் பெற்ற வெற்றியால் கொஞ்சம் மகிழ்ச்சி அடைந்துள் ளது. ஆனால் தென்னிந்தியாவில் பெரும் ஆதரவாக இருந்த ஆந்திரம் ஏறக்குறைய கையை விட்டுப் போய்விட்டதால் இயல்பாக 2014 தேர்தல் அக்கட்சிக்கு ‘ஹாட்ரிக்‘ அடிக்க உதவாது என்று விமர்சகர்கள் கணிக்கிறார்கள். தமிழகத்திலும் காங்கிரஸ் தனிமைப் பட்டாயிற்று. மேற்குவங்கத்திலும் மம்தாவுடனான கூட்டணி எப்போதோ ‘பணால்’ ஆகிவிட்டது.
தமிழகத்தில் இரண்டாண்டுகளை ஜெயலலிதா நிறைவு செய்திருக்கிறார். மின்வெட்டு என்கிற பிரச்சனை அவருக்கு திமுகவிடமிருந்து ஆட்சியைக் கைப்பற்றிக் கொடுப்பதில் உதவி செய்தது. அத்துடன் கூடவே தேமுதிக இருந்தது. இன்று இரண்டு அம்சங்களும் அவருக்கு எதிராகவே உள்ளன. மின்வெட்டு மிகவும் அதிகரித்தது. தேமுதிக நேரெதிரியாக மாறி திமுக பக்கம் போய்விடும் வாய்ப்புள்ளது. சட்டமன்றத்தில் இலங்கைக்கு எதிராக தீர்மானங்களைக் கொண்டுவந்ததன் மூலம் தமிழ் உணர்வாளர்களின் ஆதரவைப் பெற்றுள்ளார். பால்விலை, பேருந்துக் கட்டண உயர்வு, எப்போது எந்த அதிகாரி மாற்றப்படுவாரோ என்று அம்மாவின் வழக்கமான அதிரடிகளுக்கு தமிழகம் இந்த இரண்டாண்டுகளில் பழகிவிட்டது. எப்போதும் போல திமுக எதிர்ப்புக் கண்ணாடி.
ஆனால் வடக்கே காங்கிரஸ் ஆகட்டும் தெற்கே தமிழகத்தில் முந்தைய ஆட்சியில் இருந்த திமுகவும், இப்போதைய அதிமுகவும் தங்கள் ஆட்சி செய்யும் விதத்தில் ஒரு புள்ளியில் ஒன்றுபடுகின்றன. அது சமூகத்தின் அடித்தட்டு மக்களை ஓரளவுக்கு குஷிப்படுத்தி வைத்துக் கொள்வது. அது எப்படி என்கிறீர்களா?
விடுதலைக்குப் பின்னால் பசித்த யானையாகத்தான் இந்தியா இருந்தது. நேருவின் தேசக்கட்டமைப்புக்கான சோஷலிச மாதிரி, மெல்லத் தேய்ந்து தொண்ணூறுகளில் தாராளவாத பொருளாதாரக் கொள்கை அறிமுகமான பின்னால் இந்தியப் பொருளாதாரம் ஆண்டுக்கு சராசரியாக 8 சதவீதம் அதிகரித்து பத்தாண்டுகளில் நல்ல வளர்ச்சி ஏற்பட்டது. ஆனால் அதே சமயம் இதன் பின்விளைவு பெருமளவில் ஏற்பட்ட ஏழை- பணக்காரர் இடைவெளி. தொழில் மற்றும் சேவைத்துறை வளர்ச்சியால் பெருமளவுக்கு முதல் தலைமுறை குடும்பங்கள் கிராமங்களை விட்டு நகரங்களுக்கு இடம் பெயர்ந்தனர். நகர்ப்புற, கிராமப்புற என்று இரு பெரும் சமூகப் பிரிவுகள் உருவாகின. இந்த வளர்ச்சியின் இன்னொரு புறம் நாட்டு வளங்கள் சுரண்டப்பட்டு, ஒரு பகுதி மக்கள் வளர்ச்சியின் பாதையில் ஒதுங்கியே இருக்கும்படியான சூழல் உருவாகியது. கடந்த 20 ஆண்டுகளில் ஏற்பட்ட மிக முக்கியமான நிலைமை இது.
கிராமப்புறங்களில் நிலமற்ற கூலித்தொழிலாளர்கள் தாங்கள் அடைந்திருந்த ஓரளவு கல்வி, பொதுஅறிவு மூலமாக கொந்தளிக்கும் நிலை உருவாவதை அரசுகள் தவிர்க்கவே விரும்பின. எழுபதுகளுக்குப் பின்னால் ஏற்பட்ட தீவிர இடதுசாரி இளைஞர் எழுச்சி ஒடுக்கப்பட்டது நினைவிருக்கலாம். அப்படியொரு சிக்கலை மீண்டும் விரும்பாத நிலையில்தான் கிராமப்புறங்களை முன்வைத்து நல்வாழ்வுத் திட்டங்கள் தீட்டப்பட்டன. 100 நாள் வேலைத்திட்டம் மத்திய அரசால் 2006-ல் தொடங்கப்பட்டது. இது கிராமப்புறங்களில் எழுந்த அல்லது நிலவிய கசப்புணர்வை, கொந்தளிப்பை அமைதிப்படுத்தியது.
இதையொட்டியே தமிழ்நாட்டில் நியாயவிலைக் கடைகளில் 20 கிலோ அரிசி, கிலோ இரண்டுரூபாய்க்குக் கொடுக்க ஆரம்பித்து, பின்னர் ஒரு ரூபாய் ஆகி இப்போது முழுக்க விலை இல்லா அரிசி என்றானதைக் கவனிக்கவேண்டும். இந்த உணவு, வேலைத் திட்டங்கள் பெருமளவில் மக்களைச் சாந்தப் படுத்தியுள்ளன. வளர்ச்சியில் அவர்களுக்கு இப்படி பங்கு கிடைக்கிறது.
தமிழ்நாட்டில் மூன்றாவது முறை ஆட்சிக்கு வந்து, இரண்டாவது ஆண்டைக் கொண்டாடி யிருக்கும் ஜெயலலிதா அரசு, சென்னை நகரில் அறிமுகப்படுத்தியுள்ள மலிவு விலை அம்மா உணவகங்களை மேற்சொன்ன கிராமப்புறத் திட்டங்களின் நகர்ப்புறப் பதிப்பாகப் பார்க்கலாம். நகர்ப்புற ஏழைகளின் சலிப்பையும் கோபத்தையும் தீர்க்கும் அரசின் கரங்கள் இவை. எப்படி முந்தைய சத்துணவுத் திட்டமும், குறைந்த விலை அரிசித் திட்டமும் பிற மாநிலங்களுக்கும் சென்றனவோ, அதுபோல் அம்மா உணவகங்கள் அவற்றின் நீடிப்புத் தன்மையைப் பொறுத்து நாடு முழுவதும் செல்லும் வாய்ப்பு உள்ளது.
தனி மனிதனுக்கு உணவில்லையென்றால் ஜெகத்தினை அழித்திடுவோம் என்றார் பாரதி. உணவுப் பஞ்சம் தலைவிரித்தாடிய நாடாக நம் நாடு இருந்தது என்பது வரலாறு. கிராமப்புற மக்கள் பெருமளவில் அஞ்சியது பட்டினியைக் கண்டுதான். அன்னத்தை வீணாக்குவது பண்பாட்டு அளவில்கூட மிகப்பெரிய குற்றமாகக் கருதப்பட்டது. ஒரே ஒரு வேளை உணவு அல்லது இருவேளை உணவுடன் தான் சுமர் 20 ஆண்டுகளுக்கு முன்னால் நம் கிராமங்கள் இருந்தன. இன்று வயிற்றுத் தீ அணைந்துவிட்டது. அது போட்டு வைத்திருந்த கிராமப்புற கொத்தடிமைத் தளைகள் உடைந்துவிட்டன. இதெல்லாம் உண்மைதான்.
மின்வெட்டால் தொழில்கள் பாதிக்கப்பட்டும், காவிரி நீரின்றியும் முல்லைப் பெரியாறு பிரச்னையாலும் தொடர்ந்து பாதிக்கப்பட்டும் கிராமப்புற விவசாயிகள் மற்றும் தொழிலாளர்கள் பெரிதாகக் கொந்தளிக்காததற்கு இந்த மக்கள் ஆதரவு, உதவித் திட்டங்களும் ஒரு காரணமாக இருக்கின்றன. கிராமங்களில், நகரங்களில் எளிதில் கொந்தளிக்கக் கூடிய பிரிவினரை சமாளித்துக் கொண்டால் போதும். பிரச்னையின்றி ஆட்சியை ஓட்டிவிடலாம் என்பது கடந்த பத்தாண்டுகளில் அரசுகள் கண்டுகொண்டிருக்கும் விஷயம். இதையும் மீறி எழக்கூடிய எதிர்ப்புணர்வும் டாஸ்மாக் கடைகளில் அடங்கிவிடும்.
ஆகவே நாடு தொடர்ந்து அமைதிப் பூங்காதான்.
சென்னையில் இயங்கிவரும் பல தனியார் குடிநீர் சுத்திகரிப்பு நிலையங்கள், பசுமைத்தீர்ப்பாயத்தின் ஆணைப்படி சமீபத்தில் மூடப்பட்டன. சரியான சுத்திகரிப்பு முறைகளை அவர்கள் பயன்படுத்தாதே காரணம். உடனே இங்கிருக்கும் மற்ற குடிநீர் சுத்திகரிப்பாளர்களும் வேலை நிறுத்தம் அறிவித்தனர். கேன் தண்ணீருக்கே பழகிப்போன சென்னை வாழ் நடுத்தர மக்கள் பரிதவித்தனர். சுமார் இரண்டு நாட்கள் விழி பிதுங்கினர். 25- 30 ரூபாய் விற்ற கேன்கள் கிடைக்கவே இல்லை. பின்னர் சில நாட்களில் அவர்களே வேலைநிறுத்தத்தை திரும்பப் பெற்றனர். அப்போதுதான் ஒரு விஷயம் ஞாபகம் வந்தது. 2011 அதிமுக தேர்தல் அறிக்கை இந்த விஷயம் பற்றிக் கூறியிருக்கிறது. அதைப் புரட்டினோம். அதில் இருந்த அதிமுகவின் வாக்குறுதிகளில் ஒன்று வறுமைக் கோட்டுக்குக் கீழே இருக்கும் ஒவ்வொரு குடும்பத்துக்கும் 20 லிட்டர் சுத்திகரிக்கப்பட்ட தண்ணீர் இலவசமாக வழங்கப்படும் என்பது. இதன்மூலம் 5.6 பேருக்கு புதிய வேலை வாய்ப்பு; 1 லட்சம் பேருக்கு போக்குவரத்து துறையில் வேலைவாய்ப்பு; 20000 புதிய தொழிற்சாலைகள் உருவாக வாய்ப்பு என்று அந்த அறிக்கை கூறுகிறது. அது என்ன ஆச்சு?
ஜூன், 2013.